நூற்றுக்கணக்கானோரின் உயிரை பறித்த 20 நிமிடங்கள்...! கொடூர விபத்தின் பின்னணி தொடர்பில் வெளியான தகவல்
உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்து குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தற்போது வரை 275 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விபத்து சுமார் 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், முதல் விபத்து நடந்து 20 நிமிடங்களுக்கு பின்னரும் விபத்து குறித்து ஹவுரா தொடருந்து ஒட்டுநருக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளதுடன்,சிக்னல் அமைப்பில் இடையூறு ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலர் பலி
இந்த விபத்தில் சிக்கிய சுமார் 40 பேர் உடல்களில் எந்த காயங்களும் இரத்தக் கறையுமின்றி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தொடருந்து பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி தூக்கி வீசப்பட்ட போது தண்டவாளத்தின் கம்பிகளில் உரசி மின்சாரம் பாய்ந்ததனால், மின்சாரம் தாக்கி 40 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என கூறப்படுகின்றது.
மேலும், விபத்தில் பலியான 101 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அந்த உடல்களை அரசு பதப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு
இதற்கிடையே விபத்து குறித்து ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு), அலட்சியத்தால் மரணங்கள் ஏற்படுத்தும் ஐபிசி 34 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் உயிரை ஆபத்தில் தள்ளும் குற்றத்திற்கான தொடருந்து சட்டத்தின் 153, 154 & 175 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், இது அரசியல் செய்யும் நேரமில்லை என்று கூறி இராஜினாமா செய்ய அவர் மறுத்துள்ளார்.