கல்லடி பாலத்திற்கு அருகில் ஆக்கிரமிப்பு முயற்சி: மட்டு மாநகர முதல்வரால் முறியடிப்பு (PHOTOS)
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதியை அபகரிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி மாநகர முதல்வரினால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளதுடன், அபகரிப்புக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களும் மாநகரசபையினால் கையகப்படுத்தப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தினை வாவியில் கொண்டு சேர்க்கும் பகுதியாக குறித்த வடிச்சல் பகுதி காணப்படுகின்றது.
நீண்ட காலமாக குறித்த பகுதியை சிலர் அபகரிக்கும் நோக்குடன் வேலி அடைக்க முற்படும் நிலையில் அவற்றினை தடுக்கும் செயற்பாடுகளை பிரதேச மக்களும், மாநகரசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
இன்று சிலர் குறித்த வடிச்சல் பகுதியை வேலியிட்டு அடைக்க முற்பட்ட போது அங்கு சென்ற மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியதுடன் அது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியுள்ளார்.
குறித்த பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும், குறித்த பகுதியில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும் இதன்போது பிரதேச செயலாளர் வேலியடைப்பில் ஈடுபட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்பகுதியானது அரச காணியாகவும் வடிச்சல் பகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் போலியான ஆவனங்களைக்கொண்டு வந்து பொலிஸாரின் ஆதரவுடன் குறித்த பகுதியை அபகரிக்க முனைவதாக மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
ஐந்தாவது தடவையாக இவ்வாறான போலி ஆவணங்களைக்கொண்டு வந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.இதற்கு முன்னர் காணி அடைக்கும் போது அதனை தடுத்த பொதுமக்கள் நான்கு பேருக்கு எதிராக குறித்த நபர்களினால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் அவர்களுக்கு இந்த காணிக்குள் செல்லக்கூடாது என தடை விதித்துள்ளனர்.
காணி விடயங்களில் தலையிடுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை.அரச காணியை அபகரிப்பவர்கள் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் சென்றுவர வேண்டும்.அவ்வாறில்லாமல் இவ்வாறு சட்டவிரோத காணி அபகரிப்பினை முன்னெடுப்பவர்கள் பொலிஸாரின் துணையுடன் வருவது இலங்கையின் சட்டத்தினை மதிக்கும் செயற்பாடு இல்லை.
அரச காணிகளை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் சட்ட விரோத ஆபகரணங்களைக்கொண்டு காணிகளை அபகரிப்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது கவலைக்குரியது.
இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடைவிதித்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும்.
எதிர்வரும் காலத்தில் குறித்த பகுதியில் மாநகரசபையினால் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து பாதுகாக்கவுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.











உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
