தென்னக்கோனுக்கு எதிராக ஆட்சேபனை மனு
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல அனுமதிக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மாத்தறை மேல் நீதிமன்றத்தில், ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னதாக, மாத்தறை நீதவான் அருண புத்ததாச, கடந்த வியாழக்கிழமை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல தென்னக்கோனுக்கு அனுமதியளித்தார்.
எனினும், சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையான, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்குவதை கடுமையாக எதிர்த்தார்.
விசாரணையைத் தடுக்கும் விடயம்
இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் கிட்டத்தட்ட 20 நாட்கள் கைது செய்வதைத் தவிர்த்து வந்ததாகவும், இந்த நேரத்தில் அவரை விடுவிப்பது அவருக்கு எதிரான விசாரணையைத் தடுக்கும் என்றும் ஏ.எஸ்.ஜி பீரிஸ் வலியுறுத்தினார்.
2023 டிசம்பரில் வெலிகமவில் உள்ள விருந்தகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தென்னக்கோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட, கொழும்பு குற்றத்தடுப்பு அதிகாரியின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியிலிருந்து 2.5 மில்லியன் ரூபாயை விடுவித்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |