பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ள மத்திய மாகாண தனியார் பேருந்து சாரதிகள்
நுவரெலியா (Nuwara Eliya) - தலவாக்கலை (Talawakelle) தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்றைய தினம் (01) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா - தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா - ஹட்டன் சொகுசு பேருந்து சாரதிக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட கால முரண்பாடு
இதன்போது, நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துடனர் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் தலவாக்கலை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு தனியார் பேருந்துகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
இதன் காரணமாக, பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |