நுவரெலியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: மாவட்ட செயலாளர் நந்தன கலபொட
நுவரெலியா மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற இறுதிக் கட்டக் கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
534 வாக்களிப்பு நிலையங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாவட்டத்திலுள்ள 534 வாக்களிப்பு நிலையங்களுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளிக்கிழமை(20) காமினி தேசிய பாடசாலைக்கு வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
நுவரெலியாவில் உள்ள பாடசாலைகள் மற்றும் நகர மண்டபங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைத்து உரிய பணிகள் செய்யப்பட்டுள்ளன.
சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் உரிய முறையில் கையளிக்கப்படும்.
நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 605,292 ஆகும்.
இது நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியில் 347,646 வாக்குகள், கொத்மலை தொகுதியில் 88219 வாக்குகள், ஹகுரன்கெத்த தொகுதியில் 78,437 வாக்குகள் மற்றும் வலப்பனை தொகுதியில் 90,990 வாக்குகள் என காட்டப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.