களுவாஞ்சிகுடி வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தாதியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகஸ்த்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச தாதிய உத்தியோகஸ்த்தர் சங்கத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை கிளையின் தலைவர் தி.வித்தியாபதி அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி தாதிய உத்தியோகஸ்த்தர்கள் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஈடுபடாமல் அதிலிருந்து விலகி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்திய அத்தியட்சகரே! ஏனைய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் விசேட விடுமுறைகளை எமது தாதியர்களுக்கும் வழங்குங்கள், நோயாளர்களுக்குச் செய்யப்படும் சேவைகளுக்கு இடையூறு செய்யாமல் தொடர அனுமதி செய்யுங்கள், தொழிற் சங்கங்களைக் கேலி செய்யாதே, தாதியர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்காதே, தாதியரை அடக்குமுறைக்கு உள்ளாக்காதே, ஊழியர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தாதே, உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தாதியர்கள் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரச தாதிய உத்தியோகஸ்த்தர் சங்கத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை கிளையின் செயலாளர் ஆ.அகிலன்,
எமது வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக எமது தாதிய உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். எமது சங்கத்தினால் அண்மைக்காலமாக அகில இலங்கை ரீதியில் எமது உரிமைகளையும். தேவைகளையும் பெற்றுக் கொள்வதற்காகப் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தோம்.
இதற்குச் சுகாதார அமைச்சரிடம் இருந்து சிறந்த பதில் கிடைக்கும் வரைக்கும் நாம் பி.சி.ஆர், மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளிலிருந்து நாடுபூராகவும் விலகியிருக்கின்றோம். இதனை வைத்துக் கொண்டு எமது வைத்திய அத்தியட்சகர் அவர்கள் எம்மைப் பழிவாங்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றார். அனைத்து உத்தியோகஸ்த்தர்களும், பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விசேட விடுமுறை ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அதனை எமக்கு வழங்காமல் இரத்துச் செய்துள்ளார்.
எமது சொந்த விடுமுறையை இரத்துச் செய்துள்ளார். 120 தாதிய உத்தியோகஸ்த்தர்கள் கடமையாற்ற வேண்டிய இந்த வைத்தியசாலையில் தற்போது நாங்கள் 55 பேர்தான் கடமையாற்றுகின்றோம். இவ்வாறான நிலையில் எமது கடமை நேரத்தைக் குறைத்து மேலதிக நேரக் கடமையை இரத்துச் செய்து மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளார்.
நாங்கள் 24 மணி நேரமும் கண்விழித்துக் கடமையாற்றுகின்றோம். எமது வைத்தியசாலையின்
அத்தியட்சகரினால் எமக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பலமுறை முயன்றபோது
அவர் எம்மை அவமரியாதையாக நடாத்தினார். இதனால் பாதிக்கப்படுவது நோயாளிகள்தான்.
எனவே இவ்விடையங்கள் தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்கு நாம் அறிவித்துள்ளோம் என
அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.




