நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதிய உத்தியோகத்தர்கள்
யாழ்ப்பாணம்
நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்ககோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றதுடன் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையில் பணிபுரிகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் சரியான நீதியைப் பெற்றுக்கொடு, சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் குறைக்கப்பட்டது ஏன் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் நிர்வாக சேவைகளுக்கும், வைத்திய சேவைகளுக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் செயலாளர் ஏ.ஜி.எம்.நசூஹான், அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வ.புவிதர், உள்ளிட்ட தாதியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நுவரெலியா
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொழில் புரியும் அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று (17) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்று மணித்தியாலயங்கள் சேவைகளை இடைநிறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் 2025 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நேர கொடுப்பனவுகள் குறைத்தல், மற்றும் பதவி உயர்வு முறையைக் குறைத்தல் ஆகிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, எமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தாதிய உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மன்னார்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (17) மதியம் ஒரு மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு முடிந்த போதும் சொல்லப்பட்ட வாக்குறுதி எங்கே என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அமைதியான முறையில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை தமது கோரிக்கைகளை முன் வைத்து தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாகவும் தாதியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாதியர்கள் அமைச்சரே 2027 ஆண்டு சம்பளத்திவ் கணக்கிடுவதென்று பொய் சொல்ல வேண்டாம், பழைய முறையில் பதவி உயர்வு என்றால் வரவு செலவு திட்டத்தில் போட்டது ஏன், அரசே தாதியருக்கு வரவு செலவு திட்டத்தில் சரியான நீதியை பெற்றுக்கொடு, வரவு செலவு திட்டத்தினை கொண்டு வந்தது சுகாதார ஊழியர்களை தாக்கவா போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர நோயாளர் பிரிவு, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட தாதியர்கள் சேவைகளில் ஈடுபட்டிருந்தமையுடன் ஏனைய சேவைகளிலிருந்து 3 மணிநேரம் தாதியர்கள் விலகியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




