கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும்: ஹேமந்த ஹேரத்
நாட்டில் தற்போது பதிவாகும் கோவிட் தொற்றாளர்களை விடவும் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
''கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 30 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அதில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைந்தளவில் உயிரிழந்துள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட பலர் நாட்பட்ட நோய்களைக் கொண்டுள்ளவர்கள். நீண்டகால நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருப்பவர்கள் மூலம் நோய்த் தொற்றுக்குள்ளாகி அவர்கள் உயிரிழக்க நேரிடும்.
இந்த நிலைமையைத் தடுப்பதற்காக ஆரோக்கியமாக உள்ளவர்கள் சுகாதார பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன், அனைவரும் மூன்றாவது கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
சில நாடுகளில் ஒமிக்ரொன் திரிபு பரவலின் ஆரம்பத்தில், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனால் அவற்றில் சில வளர்முக நாடுகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது இவ்வாறானதொரு நிலைமை காணப்படாவிடினும், விரைவில் அவ்வாறானதொரு நிலைமையை எதிர்பார்க்கலாம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



