அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்கா - தென் கொரியா இடையே முக்கியப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை
அணுசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையேயான முதற்கட்டப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை சியோல் நகரில் நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் ஆகியோர் கடந்த ஆண்டு மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த இருநாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தென் கொரியா தனது சொந்தத் தயாரிப்பில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்கள்
இதற்குத் தேவையான குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளைப் பயன்படுத்துவதற்கும், அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கும் உள்ள உரிமைகளை விரிவுபடுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தற்போதைய ஒப்பந்தங்களின்படி தென் கொரியாவிற்கு அணுமின் நிலையங்கள் இருந்தாலும், இராணுவத் தேவைகளுக்காக யுரேனியத்தைச் செறிவூட்ட அமெரிக்கா அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இராணுவப் பயன்பாட்டுடன் தொடர்புடையவை என்பதால், அதற்கு அமெரிக்க எரிசக்தி சட்டத்தின் கீழ் ஒரு தனி ஒப்பந்தம் தேவைப்படும் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் விளக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் விரைவில் சாதகமான முடிவுகளை எட்ட ஒப்புக்கொண்டுள்ளன. தென்கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை 2030-களின் நடுப்பகுதிக்குள் அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan