நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சி பீடம் ஏறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் முக்கியமானவை எனவும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார முறை இல்லாது ஒழிப்பது குறித்த வாக்குறுதி மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குறுதி எப்பொழுது நிறைவேற்றப்படும் என ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு முனைப்பையும் அரசாங்கத்திடம் காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினாலும், அரசாங்கம் அதற்கு உரிய பதில்களை வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அளித்த 1333 வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகள் மிகவும் முதன்மையானவை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் தொடர்பிலும் பொருளாதாரம் தொடர்பிலும் அரசாங்கம் அளித்த வலுவான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது முக்கியமானது என கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.



