உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏப்ரல் 24இல் நடத்த முடிவு : அவசர அவசரமாக காய்நகர்த்துகின்றது அரசு
உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை, தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 24ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு வசதி செய்யும் விதத்தில் அவசர அவசரமாகக் காய்களை நாடாளுமன்றத்தில் நகர்த்துகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. அது, நாளை 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் கிடைக்க வேண்டும். புதிய சட்ட மூலங்கள் தொடர்பான சட்ட ஒழுங்கு ஏற்பாடுகளின்படி அதுவே உரிய கால அவகாசமாகும்.
விசேட நாடாளுமன்ற அமர்வு
அப்படி கிடைக்கும் உயர் நீதிமன்றத்தின் முடிவை நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை விசேடமாகக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10:30 மணிக்கு தமது முதலாவது வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் விசேடமாகக் கூடுகின்றது.
அன்றைய தினமே அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவித்தல்களை விடுக்கும் அதிகாரம் அடுத்து வரும் நாள்களில் தேர்தல் ஆணையத்துக்கு வந்து விடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை தமிழ் - சிங்களப் புது வருடம் முடிந்து அடுத்த 10 நாள்களில் - பெரும்பாலும் ஏப்ரல் 24ஆம் திகதி - நடத்தக்கூடியதான தீர்மானம் ஒன்றைத் தேர்தல் ஆணையம் எடுப்பதற்கு இடம் அளிக்கும் விதத்தில் இந்தச் சட்ட நிறைவேற்ற ஏற்பாடுகள் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிகின்றது.
2023 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளுக்கன தேர்தலை நடத்த வேண்டிய நிலையில் அந்தத் தேர்தல் நிலுவையில் உள்ளது.
அந்த வேட்புமனுக்களை இரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை ஏற்று, தேர்தலை நடத்துவதற்கு வசதி செய்யும் திருத்தச் சட்ட மூலமே தற்போது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, உயர் நீதிமன்ற ஆய்வின் பின்னர் அதன் தீர்ப்பை பெறுவதற்காகக் காத்திருக்கப்படுகின்றது.
அந்தத் தீர்ப்பை நாளை 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் கிடைக்கக் கூடியதாக உயர் நீதிமன்றம் அனுப்ப வேண்டும்.
உள்ளூராட்சி சபை தேர்தல் விரைவில்
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கும் நோக்கில் 2025 பெப்ரவரி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு விசேடமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய நேற்றைய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையில் நேற்றுக் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு அமைய பிரதமரினால் சபாநாயகரிடம் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது.
அத்துடன், பெப்ரவரி 14ஆம் திகதி இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் பின்னணியில், இதற்கு மதிப்பளிக்கும் வகையில் தேர்தலை மேலும் காலதாமதப்படுத்தாது நடத்துவதன் அவசியத்தை சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்னாயக்கவிடம் நேற்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டினார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, உள்ளூராட்சி சபை தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை பெப்ரவரி 17ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் வழங்குவதற்கும் இங்கு இணங்கப்பட்டது.
அதேநேரம், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியால் 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவு - செலவுத் திட்ட உரை) முன்னர் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 10.30 மணிக்கு முன்வைக்கப்படும் என்றும் பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![முஸ்லிம்-க்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க.. அதிரடி முடிவு எடுத்த விஜய் டிவி அறந்தாங்கி நிஷா](https://cdn.ibcstack.com/article/bb6b707e-2c73-4233-85a2-e4f012d816a1/25-67a9f55620739-sm.webp)
முஸ்லிம்-க்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க.. அதிரடி முடிவு எடுத்த விஜய் டிவி அறந்தாங்கி நிஷா Cineulagam
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)