பொதுமக்களை போலி வாக்குறுதிகளால் ஏமாற்றும் அரசாங்கம்! துமிந்த திசாநாயக்க விமர்சனம்
தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுமக்களை போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றி, ஒருபோதும் நனவாகாத கனவுலகில் மிதக்க வைத்திருப்பதாக துமிந்த திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த திசாநாயக்க, இன்று(16.9.2026) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு அரசாங்கம் இரண்டு வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் பேரணிகளை நடத்தி வருகின்றது. இதுவரைக்கும் இந்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.
அரசாங்கத்தின் பேரணி
இனியாவது ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்புடனேயே அரசாங்கத்தின் பேரணிகளுக்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். எனினும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர். இந்த அரசாங்கம் இதுவரை பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.இனியும் செய்யப்போவதில்லை.
வெறுமனே போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி, பொதுமக்களை ஒருபோதும் நனவாகாத கனவுலகில் சஞ்சரிக்க வைப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் செயற்பாடாகும்.
ஜனாதிபதியாக முன்னர் பொய் கூறியது பரவாயில்லை. ஆனால் இப்போது ஜனாதிபதியான பின்னரும் பொய் கூறிக் கொண்டிருப்பதுதான் தவறானது.
மொட்டுக் கட்சி
அதே போன்று அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சி நடத்திய கூட்டத்தைக் கொண்டு அக்கட்சி தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அநுராதபுரத்துக்கு எவரும் வரலாம், போகலாம்.

ஆனால் பொதுமக்கள் சிந்தித்தே வாக்களிப்பார்கள். இன்றைக்கு மொட்டுக் கட்சியில் வீரர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்கள், மஹிந்தவுக்கு ஜனாதிபதியாக ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் யார் என்பதை சற்று பின்னோக்கிப் பார்த்து அறிந்து கொள்வது நன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.