இந்த அரசாங்கம் ஜே.ஆரின் பாதையில் பயணிக்கின்றதா?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் பாதையில் பயணம் செய்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் கல்விப் பிரிவு செயலாளர் புபுது ஜாகோட இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்த்தன காட்டிய விளையாட்டுகளை இந்த அரசாங்கத்தினால் காட்ட முடியாது, அவர்கள் எங்களிடமே சண்டித்தனத்தை காட்டுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது எனவும் தற்பொழுது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்பதை யாராவது இந்த அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சிக்காரியாலயத்தை பலவந்தமாக கைப்பற்றுவது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான செயல் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கட்சிக்காரியாலயம் தொடர்பான பிணக்கிற்கு நீதிமன்றம் ஒன்றின் வாயிலாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறு எந்தவிதமான தீர்ப்புகளும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி கட்சியினர் ரில்வின் சில்வாவை பிரதம நீதியரசராகவும் விஜித ஹேரத்தை சட்ட மா அதிபராகவும் நியமித்துள்ளதா என்பதை அவர்கள் மக்களுக்கு பகிரங்க படுத்த வேண்டுமென புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
போலீசார் சட்டத்தை அமல்படுத்துவதனை தடுப்பதற்கு உயர் மட்டத்திலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என்பதை நாம் நன்கு அறிவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மதிப்பதாகவும் நீதிமன்ற சட்ட விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை எனவும் கூறிய அரசாங்கத்தின் உண்மை நிலை இன்று அம்பலமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளாக கம்பஹா மாவட்டத்தில் நாம் பயன்படுத்தி வந்த கட்சிக்காரியாலயத்தை அரசாங்கத்தின் குண்டர்கள் இன்று பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர் என புபுது ஜாகோட குறிப்பிட்டுள்ளார்.



