மூன்று கோடி பெறுமதியான நகைகள் கொள்ளை: நீதிமன்றத்தின் உத்தரவு
நோர்வூட் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியல்.
நோர்வூட் பகுதியில் தங்க நகைகள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று கோடி 54 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை பத்திரமாக வைக்குமாறும் அடகு கடை வர்த்தகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரில் இயங்கி வந்த அடகு பிடிக்கும் வர்த்தக நிலையம் ஒன்றினை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கடந்த 30ஆம் திகதி ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த வருடம் 2021 டிசம்பர் மாதம் 09ஆம் திகதி குறித்த அடகு நிலையத்தினை உடைத்து மூன்று கோடி 54 லட்சம் ரூபா பெறுமதியான 177 பவுன் தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் இந்த கொள்ளை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு மேலதிகமாக ஹட்டன் கோட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் செய்யப்பட்ட முறைபாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் ஒரு பெண் மூன்று ஆண்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் திருடிச்சென்ற தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சூத்திரதாரி பெண்ணான ரத்நாயக்க முதியன்சலாகே ரோசினி, கண்ணன் ராஜசேகரன்,நாகன் ஸ்கந்த முருகன்,சரணமுத்து சுபராஜ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அடகு பிடிக்கும் நிலையத்தில் கடந்த பல வருடகாலமாக பணிபுரிந்த பெண் ஒருவரும் இதன் சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
177 பவுண்கள் கொள்ளை: பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைது |
