மருத்துவர்களின் சம்பளம் குறைப்பு: வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் வட மாகாண ஆளுநரை சந்தித்து அடுத்த கட்டம் தொடர்பாக கலந்துரையாட வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இடையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை சுகாதாரத்துறையின் விசேட ஏற்பாடுகள் |
மருத்துவர்களின் சம்பளம் குறைப்பு
”வடமாகாணத்தில் மருத்துவர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுவதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதுடன் இலங்கையின் இரண்டு மாகாணங்களிலேயே இந்த நிலை காணப்படுகிறது என்பதையும் ஆளுநருக்கு தெரிவித்ததாக” அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பில் சுகாதார அமைச்சு மற்றும் நிதியமைச்சு உடனான அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினுடனான சந்திப்பில் எமது சம்பள குறைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆளுநருக்கு தெரிவித்தோம்.
ஆளுநரின் பணிப்புரை
ஆகவே இது தொடர்பான சுற்றுநிருபங்கள் பெற்று உடனடியாக வட மாகாண சுகாதார அமைச்சு செயல்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் பணித்தார்.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிலையங்களில்
வரிசையில் நிற்கும் நிலையே காணப்படுவதை சுட்டிக்காட்டியபோது இது தொடர்பில்
உரிய பொறிமுறை ஒன்றை வகுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது” என தெரிவித்தார்.