தலைகீழாக மாறிய வடக்கு மாகாணத்தின் நிலைமை: வட மாகாண ஆளுநர் கவலை
மக்களுக்கு உதவிகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கு பதிலாக உபத்திரங்களையே செய்வதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபை நிதியில் புதுக்குடியிருப்பு சந்தையினுள் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்பனவற்றை ஆளுநர் திறந்து வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தினுள், திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.03.2025) இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில், முன்னைய காலங்களில் எமது மாகாணமே இலங்கையில் தூய்மையான மாகாணமாக இருந்தது. ஆனால் இன்று அது தலைகீழாக மாறிவிட்டது.
சுற்றாடல் மாசடைதல்
எப்போது 'சொப்பிங் பாக்', 'பிளாஸ்ரிக் போத்தல்' என்பன அறிமுகத் தொடங்கியதோ அன்றே எமது சுற்றாடலும் மாசடையத் தொடங்கிவிட்டது. எங்கள் இடத்தை அழகாக – தூய்மையாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை.
நாங்கள் எமது சூழல் அழகாக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், வீதியில் குப்பைகளைப் போட்டிருக்கமாட்டோம். இளமையிலேயே எங்கள் பிள்ளைகளுக்கு சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பதை பழக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.யசிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபைச் செயலர் ச.கிருசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







