வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு
2025ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது வேலைத்திட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தோம், எனவே இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்றைய தினம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கடந்த ஆண்டு அனைத்துத் தரப்பினரதும் பூரண ஒத்துழைப்புடன் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்ற முடிந்துள்ளது எனக் குறிப்பிட்டதுடன், அதற்காகப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
வட மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகம்
இதன் பின்னர், 2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்ததுடன், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதம கணக்காளர்கள் ஆகியோரிடம் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டமானது நாடாளுமன்றத்தில் மார்ச் மாதமே நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் பின்னரே, அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலேயே எங்களால் திட்டப் பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. அதனைவிட, புதிய கொள்முதல் வழிகாட்டுத்தல்களும் அதன் பின்னரே வெளியிடப்பட்டிருந்தன.
மேலும், எமது ஆளணித் தொகுதியில் பெருமளவு வெற்றிடங்கள் நிரப்பப்படாமலும் இருந்தன. இவ்வாறான பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே, எமக்குக் கிடைத்த நிதியை நாம் வினைத்திறனாகச் செலவு செய்திருக்கின்றோம். ஆனால், 2026ஆம் ஆண்டில் இவ்வாறான சவால்கள் பெரிதாக இல்லை. நாம் இந்த மாதமே இந்த ஆண்டுக்குரிய திட்டங்களை ஆரம்பிக்க முடியும். அத்துடன் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் தொடர் வேலைகளையும் இப்போதே தொடங்க முடியும்.
திட்டங்கள் முன்னெடுப்பு
ஆளணிப் பற்றாக்குறையும் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, கொள்முதல் பணிகளை ஆண்டின் முதல் காலாண்டுக்குள்ளேயே நிறைவு செய்யவும் முடியும். இதன் மூலம் ஓகஸ்ட் மாதத்துக்குள் திட்டங்களை முழுமைப்படுத்த வேண்டும். நாம் எமது திட்டங்களை முன்னெடுக்கும்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் கொள்கையையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அரசு நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கின்றது. அதைப்போல் ஏற்றுமதியையும், உற்பத்திப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகின்றது. கிராமிய வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல், முதலீட்டுக்கு உகந்த சூழல் மற்றும் சுற்றுலாத்துறை எனப் பல்வேறு விடயங்களை அரசு ஊக்குவித்து வருகின்றது. எமது திட்டமிடல்களின்போது இவற்றையும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக அபிவிருத்தியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களுக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri