வடக்கு மாகாண மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
வடக்கு மாகாண பாடசாலைகள் நாளைய தினம் (04) வழமை போன்று நடைபெறவுள்ளதுடன் புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் (T. Yon Quinrus) அறிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடுபூராகவும் இன்று (03.06.2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
எனினும், வடக்கு மாகாண காலநிலையை கருத்திற்கொண்டு நாளை பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும் எனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த மாணவர்களுக்கான க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கும் செயற்பாடுகளும் ஆரம்பமாகவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகப் பதிவேடு
இந்நிலையில், கல்வி அமைச்சின் செயலாளரது கடிதத்திற்கமைய க.பொ.த உயர்தர வகுப்புக்களை (04.06.2024) நாளை ஒவ்வொரு வலய 1ஏ (1A), 1சி (1C) பாடசாலைகளில் ஆரம்பித்து மாணவரின் வரவினை தற்காலிகப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே பாடசாலையில் கற்ற மாணவர்களினதும் வேறு பாடசாலையிலிருந்து அப்பாடசாலைக்கு வருகை தந்துள்ள மாணவர்களினதும் விபரங்களினை மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் க.பொ.த உயர்தர பாடத்துறைகளுக்கு தற்காலிகமாக இணைப்பு செய்யப்பட்ட காலப் பகுதியினுள் வருகை தந்த நாட்களின் எண்ணிக்கையானது, க.பொ.த உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் போது 80 சதவீத வரவுக்காக கருத்திற் கொள்ளப்படும்.
மேலும், க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர் தரத்தில் கற்பதற்காக வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் போது இந்த தற்காலிக இணைப்புக்கு அமைய ஏதேனும் ஒரு பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டு கற்றிருப்பது முன்னுரிமை வழங்கப்படும் விடயமாக கருத்தில் கொள்ளப்படும்.
பாடசாலை அனுமதி
அதேவேளை, மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் படி, வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில், இணைப்புக் கால எல்லையினுள் பாடசாலை வரவு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை, தற்காலிகமாக இணைப்பு பெற்றுள்ள பாடசாலை அதிபர்கள் வழங்க நடவடிக்கையெடுத்தல் வேண்டும் என்பதுடன் அதனை மேலதிக தகுதியொன்றாக கருத்திற்கொள்ள வேண்டும்.
அதேவேளை, அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காகவும், இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
அத்துடன், 2023/2024ஆம் ஆண்டுகளுக்கான சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வசதிகள், சேவைகள் கட்டணம், சீருடைகள் மற்றும் மாணவர் விடுகைப் பத்திரம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கையெடுத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
