வடக்கில் இடம்பெறும் பாரிய காணி மோசடிகள்.. விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்
வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 160 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள சசிதேவி ஜலதீபனுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்.
இக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தல் உறுதி ஊடான மோசடிகள் தொடர்பில் ஆளுநர் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
போலி உறுதிகள்
மேலும், "வெளிப்படுத்தல் உறுதி ஊடான காணிப் பதிவுகள் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. மாறாக, அதன் பெயரால் அரங்கேறும் மிகப்பெரிய மோசடிகளைத் தடுத்து நிறுத்த வேண்டியதே எமது தலையாய கடமையாகும்.

வலி. வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் காணிகள் கூட இவ்வாறு போலி உறுதிகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன' என ஆளுநர் கவலை வெளியிட்டார்.
மேலும், 'கடந்த ஆட்சியின் போது காணி மோசடிகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகளைக் கைது செய்வதற்குப் பொலிஸார் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடான வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது.
இவ்விடயத்தை நான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
போலி உறுதிகளை எழுதுவதற்குப் பதிவாளர் திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து, காணிகளின் மூல ஆவணங்களான தோம்புகளை அழித்திருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும். எனவே, இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்கான உறுதியான பொறிமுறையை நாம் விரைவாக உருவாக்க வேண்டும்” என ஆளுநர் வலியுறுத்தினார்.




