நாய் இறைச்சி உணவகத்திற்கு அனுமதி வழங்கிய நாடு! பரபரப்பை ஏற்படுத்திய தகவல்
நாட்டின் தலைநகரில் ஆடம்பர நாய் இறைச்சி உணவகத்திற்கு(Dog Meat Delicacy House) வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கிம் தலைமையில் நடைபெற்ற விவசாய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
வட கொரிய மக்களிடையே ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் கால பேரழிவு, போர் பதட்டங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கல்களால் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டு வட கொரியாவில் பல உயிர்கள் பட்டினியால் உயிரிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தேசிய உணவாக நாய் இறைச்சி
இந்த நாய் இறைச்சி உணவகம், பியோங்யாங்கில் உள்ள பிரதான நதிக்கரையில் அமைந்துள்ள நன்கு அறியப்பட்ட Okryugwan நூடுல்ஸ் உணவகத்துக்கு அருகில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கிம் ஜாங் உன், 2021 இல் அரசு தொலைக்காட்சியில் பேசும் போது புதிய நாய் இறைச்சி உணவகத்தை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவில் தேசிய உணவாக நாய் இறைச்சி கருதப்படுகிறது, இதற்காக வட கொரியாவில் பல உணவகங்கள் இருக்கும் நிலையில், விலங்கின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தும் சமையல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.