வடகொரியாவின் அதிநவீன ஆயுதச் சோதனை - பதிலடி கொடுக்க 5 இலட்சம் ட்ரோன் போர்வீரர்களை உருவாக்கும் தென்கொரியா
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில், அந்நாட்டு இராணுவம் தனது எல்லையைப் பாதுகாக்கவும் இராணுவத் திறனை வலுப்படுத்தவும் அதிநவீன ஆயுதச் சோதனைகளை நடத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பல்குழல் ரொக்கெட் லோஞ்சர்கள், தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் ஆகியவை இதில் சோதிக்கப்பட்டன.
எதிரிகள் எப்போதும் அச்சத்திலேயே இருக்கும்படி வடகொரிய இராணுவம் அதிதீவிரமான தாக்குதல் நிலையை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த புதிய ஆயுதங்கள் தென்கொரியா முழுவதையும் தாக்கும் திறன் கொண்டவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ட்ரோன் போர்வீரர்கள்
வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியா 5,00,000 "ட்ரோன் போர்வீரர்களை" உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போர்வீரர்கள் ட்ரோன்களைத் தங்களின் சொந்த துப்பாக்கிகளைப் போலப் பயன்படுத்தப் பயிற்சி பெறுவார்கள் என்று தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் அன் கியூ-பேக் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிற்கு ரஷ்யா தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதால் இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று குறிப்பிட்ட தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், பாதுகாப்புத் துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தென்கொரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.