உலக அழிவிற்கு காரணமாகும் உக்ரைன்: கிம் ஜொங் உன் சகோதரி கிம் யோ குற்றஞ்சாட்டு
அணு ஆயுதங்களுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் சகோதரி, உலக அழிவிற்கு உக்ரைன் காரணமாக மாறவிருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது போன்று உக்ரைனில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த பொதுமக்களின் ஆதரவை கோரியிருந்தார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
அணு ஆயுதங்கள்
இதுவரை சுமார் 1,000 பேர்கள் மட்டுமே உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையை ஆதரித்துள்ளனர். ஜெலென்ஸ்கியின் இந்த நிலைப்பாடு காரணமாகவே, கிம் ஜொங் சகோதரி கிம் யோ, ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது திட்டமிட்ட அரசியல் நாடகம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வெளியான தகவலில், ரஷ்யாவின் அணு ஆயுதங்களை எதிர்கொள்ள உக்ரைன் பிராந்தியங்களில் தங்களின் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என உக்ரைன் ஜனாதிபதி அலுவகம் குறிப்பிட்டிருந்தது.
வடகொரியா- ரஷ்யா உறவு
ஆனால் பொதுமக்களில் 25,000 பேர்கள் ஆதரித்தால் மட்டுமே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வடகொரியாவை பொறுத்தமட்டில் அவர்கள் தற்போது ரஷ்யாவுடனே நெருக்கமான போக்கை முன்னெடுத்துள்ளனர். உக்ரைன் மீதான படையெடுப்பை வெளிப்படையாகவே ஆதரித்தும் உள்ளனர். ஆனால் இதுவரை ரஷ்யாவுக்கு ஆயுதம் ஏதும் வழங்கவில்லை என்றே உறுதியாக கூறி வருகின்றனர்.
உக்ரைனுக்கு இராணுவ டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவை கிம் யோ முன்னர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ரஷ்யாவின் திட்டமிடப்பட்ட பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து பிராந்திய சூழ்நிலையை தற்போதைய மோசமான நிலைக்கு தள்ளும் பரம எதிரி இந்த அமெரிக்கா என கிம் யோ சாடியிருந்தார்.
மேலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களை குவித்தாலும், பலம் பொருந்திய ரஷ்யாவால் சிதறிக்கப்படும் என்பதில் தமக்கு துளியும் சந்தேகமில்லை என கிம் யோ குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்யாவுடன் எந்த நெருக்கடியான காலத்திலும் துணை நிற்போம் எனவும் கிம் யோ வெளிப்படையாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.