புதிய தலைமுறைக்குச் சேவை மனப்பாங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்! வடக்கு ஆளுநர்
'பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது. எத்தனை மாணவர்களைத் தமது சமூகத்துக்குச் சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதற்கு வழங்கியுள்ளோம் என்பதில் தான் ஒரு பாடசாலைக்கு உண்மையான பெருமை கிடைக்கும்' என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எப்போதும் தலைமைத்துவத்தையே வலியுறுத்தி வருகின்றேன். எந்தவொரு பாடசாலையினதும் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அதிபரில் தான் தங்கியிருக்கின்றது.
சேவை மனப்பாங்கு
சிறப்பான தலைமைத்துவம் அமைந்தால் அந்த நிறுவனம் எழுச்சியடையும். தவறான தலைமைத்துவம் கிடைத்துவிட்டால் அது வீழ்ச்சியடையும்.
தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் உயர்பதவிகளில் இருப்பதால் நாம் தினமும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்.

தலைமைத்துவப் பண்புக்கு மேலதிகமாகச் சமூகப் பொறுப்பும் மனிதநேயமும் அவர்களிடம் இல்லாததால் பாதிக்கப்படுவது எமது மக்கள்தான்.
புதிய தலைமுறைக்குச் சேவை மனப்பாங்கு என்றால் என்னவென்றே தெரியாத காலமாக இது மாறி வருகின்றது. எனவே, பாடசாலைகள் இளவயதிலேயே பிள்ளைகளுக்குப் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பழக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.