நன்னீர் மீன்பிடி திட்டத்தை விரிவுபடுத்துமாறு வடக்கு ஆளுநர் வலியுறுத்து
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அத்தோடு, இந்தத் திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.05.2026) காலை ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நன்னீர் மீன்பிடி
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் பொருளாதார முதுகெலும்பாக விவசாயமும் மீன்பிடியுமே விளங்குகின்றன.
ஆயினும், விவசாயிகளுக்கோ அல்லது கடற்றொழிலாளர்களு்கோ தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் உள்ள இடர்கள் மற்றும் விலைத் தளம்பல்கள் பிரதான சவாலாக அமைந்துள்ளன. இடைத்தரகர்களே அதிக இலாபமீட்டுபவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்த நிலையை மாற்றியமைப்பதற்குப் பெறுமதி சேர் உற்பத்தித் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும். இதில் போட்டித்தன்மை ஏற்பட்டாலேயே விவசாயிகளும், கடற்றொழிலாளர்களும்
தமது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளால் வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.