சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வினை உறுதிசெய்யுமாறு வடக்கு கிழக்கில் போராட்டம் (Video)
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை உறுதிசெய்ய வலியுறுத்தி வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் கடந்த ஆண்டு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த 100நாள் போராட்டம் நடைபெற்று ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு இந்த கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று (31.07.2023) மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி சதுக்கத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வி.லவகுசராசா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,வலிந்துகாணாமல்ஆக்கப்ப்ட்டவர்களின் உறவினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
திருகோணமலை
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்று (31.07.2023) திருகோணமலையில் காலை 09.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
செய்தி-பதுர்தீன் சியானா
கிளிநொச்சி
கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த போராட்டமானது பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- யது
மன்னார்
சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை நினைவு கூறும் வகையில் இன்று மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கடந்த ஒரு வருட நிறைவை நினைவு கூறுகின்றோம்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் நாளை 1 ஆம் திகதியுடன்(1-08-2023) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி 100 நாள் செயலமர்வை நடத்தி இருந்தோம்.
அதன் விளைவாக மக்கள்,பல்வேறு குழுக்கள்,சிவில் சமூகம் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடி நாங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றோம். பல்வேறு நாடுகளுக்கும் அறிக்கையை சமர்பிக்கின்றோம்.
மக்களின் குரலாக தொடர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்குள் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி வடகிழக்கு மக்களாகிய நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டு இருப்போம் என தெரிவித்துள்ளார்.
செய்தி-ஆஷிக்
யாழ்ப்பாணம்
தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இன்று பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால்
தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.
செய்தி-தீபன்