வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள்(Photos)
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (05.01.2023) ஆரம்பிக்கப்பட்ட அமைதி வழியிலான தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்று திருகோணமலை மக்கேசர் விளையாட்டு அரங்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.
இப்போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சார்ந்த சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இவ் அமைதி வழி போராட்டத்தின் ஊடாக வட கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒருமித்து ஒரே குடையின் கீழ் புரையோடிடக் கிடக்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நோக்கிய ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தையில் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய இலங்கைக்குள் வடகிழக்கு ஒருங்கிணைந்த மீளப்பெர முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வினை வலியுறுத்தி பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் எனும் பலத்த குரலினை வடகிழக்கு தழுவிய 8 மாவட்டங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
தொடர்ந்து வரும் நாட்களில் இடம்பெறும் போராட்டத்திற்காக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் என பலருக்கும் அழைப்பு விடுப்பதாக வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
மன்னார்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 'ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு' அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
'ஒன்றிணைவோம் ஒருமித்த குரலில் உரக்கச் சொல்வோம்' எனும் தொனிப் பொருளில் நேற்று வியாழக்கிழமை (5) தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில் மன்னாரில் 2 ஆம் நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(6) காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமானது.
வடக்கு- கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள்,கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10 ஆம் திகதி
வரை குறித்த போராட்டம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-ஆஷிக்
கிளிநொச்சி
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பளை நகர்ப் பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
செய்தி-எரிமலை
யாழ்ப்பாணம்
தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டமானது யாழ்ப்பாணத்தில் நாவற்குழி சந்திக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
"ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
செய்தி-தீபன்
மல்லாவி
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 2ம் நாளாக மல்லாவி பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று இடம்பெற்றது.
இன்று காலை 11 மணியளவில் மல்லாவி பேரூந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் "வடகிழக்கு மாகாணங்கள் மீள ஒன்றாக்கப்பட்டு ,வடகிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்" "அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் " "இணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசால் மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் " போன்ற பதாதைகள் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா தரணிக்குளத்தில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இன்று (06) காலை 11 மணியளவில் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
இதன் போது கோரிக்கைகள் அடங்கிய மனு ஊடகங்களுக்கு வாசித்து காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-ஷான்
முல்லைத்தீவு
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மல்லாவி நகர்ப் பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற
முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்
ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
செய்தி:எரிமலை
அம்பாறை
ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி அம்பாறை பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில் பொது மக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி கடந்த 5 திகதி தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரையிலான தொடர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மக்கள் ஒன்று திரண்டு குறித்த சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது ”வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் சிறுபான்மை தமிழ் அரசியல்கட்சிகள் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதில் பெண்கள் 50 வீதம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
தற்போது வடகிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983 களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் மத கலாச்சார இடங்கள் தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தல் வேண்டும்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்” என வாசகங்கள் கொண்ட சுலோகங்களுடன் கோஷம் எழுப்பியவாறு பொதுமக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்திருந்தனர்.



