மன்னாரில் அவசர சிகிச்சை பிரிவு இல்லாமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் உரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இதுவரை அமைக்கப்படவில்லை என மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் (DRIVE) மென் கடன் நிதி அளிப்பு திட்டத்தின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்தினம் (22.03.2024) பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு
மன்னார் மாவட்டத்தில் எப்பகுதியில் விபத்து இடம்பெற்றாலும் முழுமையாக சிகிச்சை வழங்க கூடிய எந்த வசதியும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக உயிருக்கு ஆபத்தான விபத்துக்கள் ஏற்பட்டால் சிகிச்சை வழங்க முடியாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அல்லது வவுனியாவிற்கு அனுப்ப வேண்டிய நிலையே மன்னார் வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வருவதாக கூறுகின்றனர்.
இந்த பிரச்சினை காரணமாக இதுவரை மன்னாரில் பல மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாத நிலையே காணப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட போது இராஜாங்க அமைச்சரும் மன்னார் அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
எனினும் இவ்வாறன ஒரு சிகிச்சை பிரிவு மன்னார் மாவட்டத்திற்கு தேவை என்பது பற்றி அவர் கூறவில்லை என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட புதிய சிகிச்சை பிரிவானது அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்க பிரிவு, சிறுவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
ஆனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள சிகிச்சை பிரிவு வெறுமனே சாதாரண அறை ஒன்றில் உரிய சிகிச்சை உபகரணங்கள், நவீன கருவிகள் இன்றியே நீண்ட காலமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |