இரு பிரித்தானியா பிரஜைகளையும் மன்னிக்க எந்த காரணமும் இல்லை - ரஷ்ய ஆதரவு தரப்பின் அறிவிப்பு
உக்ரைனுக்காக போரிட்டபோது சிறைபிடிக்கப்பட்ட பின்னர் கடந்த வாரம் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பிரித்தானிய பிரஜைகளை மன்னிக்க எந்த காரணமும் இல்லை என்று உக்ரைனின் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் சுயமாக அறிவிக்கப்பட்ட நீதிமன்றம் வியாழன் அன்று இரு பிரித்தானியர்களான ஐடன் அஸ்லின், ஷான் பின்னர் மற்றும் மொராக்கோ நாட்டவரான பிரஹிம் சாடூன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தத.
குடியரசைக் கவிழ்க்க முயன்ற "கூலிப்படை நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாக குறித்த மூவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா ஒப்பந்தத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட வேண்டும்
இந்நிலையில், அஸ்லினும் பின்னரும் வழக்கமான சிப்பாய்கள் என்றும், போர்களில் பங்கேற்றதற்காக வழக்குத் தொடரப்படுவதிலிருந்து ஜெனிவா ஒப்பந்தத்தின் கீழ் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
டொனெட்ஸ்கைக் கட்டுப்படுத்தும் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் குறித்த மூவரும் கடுமையான குற்றங்களைச் செய்துள்ளதாகவும், மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
"மன்னிப்பு குறித்த அத்தகைய முடிவை எடுக்க எந்த அடிப்படையும், முன்நிபந்தனைகளும் இல்லை," என்று டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவரான டெனிஸ் புஷிலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த புடின்
டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவை கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவுடன் பிரிந்த இரண்டு பகுதிகளாகும், இது கியேவின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் விடுபட்டுப் போராடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான அதன் படையெடுப்பைத் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.
புடினின் இந்த அறிவிப்புக்கு உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளால் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.