பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எந்த சட்டத்தரணிகளும் முன்னிலையாகக் கூடாது: க.விஜிந்தன்
பாடசாலை மாணவர்களின் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எந்த சட்டத்தரணிகளும் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 50 ஆவது சபைக்கூட்டம் நேற்று சபையின் தவிசாளர் க.விஜிந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சபையினால் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் தொடர்பில் தவிசாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகம்
”இந்த அமர்வில் இரண்டு விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான ஆசிரியரின் நடவடிக்கை தொடர்பிலும் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஒரு கடிதத்தினை கொடுக்க முடிவெடித்துள்ளோம். பாடசாலை மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ஆசிரியரின் வழக்கில் எந்த சட்டத்தரணிகளும் முன்னிலையாகக் கூடாது என்பதுடன் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து அவருக்கு வழங்கக்கூடிய ஆகக்கூடிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதேச சபை சார்பாக அனுப்ப தீர்மானித்துள்ளோம்.
அது மட்டுமல்ல சபைக்குட்பட்ட எல்லையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு இயங்கவேண்டும். இரவு நேர வகுப்புக்கள் எத்தனை மணிமட்டும் எடுக்க வேண்டும் என்ற சட்டரீதியான கோவையினை அனுப்பியுள்ளோம்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியினை மட்டும் எதிர்பார்க்கக்கூடாது ஒழுக்கத்துடன் கூடிய கல்வியினை எதிர்பார்க்கவேண்டும்.
பிள்ளைகளின் வகுப்புக்கள் அல்லது தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கை தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும்.
நில ஆக்கிரமிப்பு
அத்துடன், அண்மைக்காலமாக சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பகுதிகளில் நில ஆக்கிரமிப்புக்கள் கலாச்சாரத்திற்கு பொருத்தமற்ற வகையில் கட்டுமானங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வட்டுவாகல் சப்த்த கன்னிகள் ஆலயத்தினால் தீர்த்தம் எடுக்கப்படுகின்ற இடம் இராணுவத்தினால் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு மக்கள் பயன்படுத்திவந்த பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை இராணுவத்தினர் தடைப்படுத்தி மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
அத்தோடு இராணுவ முகாம்களுக்குரிய பெயரினை வீதிகளில் பயன்படுத்தி வருகின்றமை இலங்கையின் சட்டத்திற்கு முரணாக இருக்கக்கூடியது என நேற்றைய அமர்வில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையினை மேற்கொள்ள ஆரம்ப கட்டவேலையினை ஆரம்பித்துள்ளோம்.
விரைவில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து இதுபோன்ற விடயங்கள் எங்கள் பிரதேசங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு சரியான தீர்ப்பினை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
அதை தொடர்ந்து அந்த பிரதேச மக்களும் முறைப்பாடு செய்துள்ளார்கள் மக்களின் முறைப்பாட்டிற்கு
தலைசாய்த்து அவர்களின் உரிமையினை பெற்றுக்கொடுக்க தொடர்ச்சியாக செயற்படுவோம்” என்றும் தெரிவித்தார்.



