சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில வைத்தியர் ரஜீவ் வெளியிட்ட தகவல்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிகள் வழமைபோல் சுமுகமாக நடைபெற்று வருவதாக வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் இன்றைய நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வைத்தியர் அர்ச்சுனா நேற்று (15.07.2024) காலை அலுவலகத்துக்கு வருகை தந்து தன்னுடைய காலப் பகுதியில் ஏற்கனவே இருந்த அரச கடிதங்களைப் பார்வையிட்டு கையொப்பத்தைப் பதிவிட்டிருந்தார்.
வைத்தியசாலை பணிகள்
மத்திய அரசால் வழங்கப்பட்ட கடிதத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும், தான் மத்திய அமைச்சிடம் நேரடியாகச் சென்று கேட்டபோது தனக்கு அந்தக் கடிதம் வழங்கப்படவில்லை என்றும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்தார்.
நான் அந்தக் கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்கினேன். அவர் அதனைப் பார்வையிட்டபோதும் எடுத்துச் செல்லவில்லை.
அதன் பின் தொடர்ச்சியாக என்னைக் கடமையாற்றுமாறு கூறிவிட்டு அத்தியட்சகர் காரியாலயத்திலிருந்து வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினார். வைத்தியசாலைப் பணிகள் வழமைபோல் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.
அபிவிருத்தி பணிகள்
எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் நோயாளிகள் தமக்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள். அதேபோல் வைத்தியர்களும், ஏனைய உத்தியோகத்தர்களும் தமது கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
நாங்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலையினுடைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றோம்." - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |