சிவராம் கொலை தொடர்பில் சித்தார்த்தன் வெளியிட்ட தகவல்
ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சிவராமின் கொலை வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிவராமினுடைய கொலையானது 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அது சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிலிருந்து அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் நலன்கள்
அதனுடைய அர்த்தம் இனிமேல் அந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதாகும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது கூட என்னிடம் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்தக் கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதும், வேறு நபர்களே அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.
அது தொடர்பில் அரசும் இப்போது அது பற்றி கூறியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவே கருதுகின்றேன். ஜே.வி.பியினரும் வடக்கு, கிழக்கிலே போட்டியிடுகின்றார்கள். தங்கள் அரசியல் நலன்களுக்காகவே இந்த வழக்குகள் அவர்கள் பற்றி பேசியிருக்கின்றார்கள்.
மீள் விசாரணை
அதுபோல ஏனைய தமிழ்க் கட்சிகளும் தங்கள் அரசியல் நோக்கத்துக்காகவே தராகி சிவராமையும் எங்களையும் தொடர்புபடுத்தி பேசிக் கொண்டிருக்கின்றன. தராகி சிவராம் கொலை வழக்கை மீள விசாரிப்பது தொடர்பில் அரசு தெரிவித்த கருத்தை நான் ஒரு விடயமாகவே கருதவில்லை.
கடந்த காலங்களிலே எத்தனையோ கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. அது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. தராகி சிவராம் கொலை வழக்குத்தான் மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது என்று சொல்லப்படுகின்றது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெறுகின்றது. அதனைப் பார்த்து அரசு உட்பட அனைவருமே பயமடைந்து தான் தராகி சிவராம் கொலை வழக்கையும் புளொட்டையும் தொடர்புபடுத்திக் கருத்தைச் சொல்லி வருகின்றார்கள்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |