இலங்கையில் பதவி பறிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிய சபாநாயகரின் பரபரப்பு தகவல்
இலங்கை நாட்டை லிபியா அல்லது ஆப்கானிஸ்தானாக மாற்ற சதி செய்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரகல போராட்டத்தின் போது சில அரச விரோதிகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் சதி செய்து சட்டவிரோத அரசாங்கத்தை நிறுவ முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நிலைப்பாட்டை மாற்றாததால் அரசு முடக்கம் திட்டம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை தோல்வி அடைந்த நிலையில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தாம் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட நாள் முதல் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காகவும் இலங்கைக் குடியரசின் இருப்புக்காகவும் அதிகபட்ச ஆற்றலுடனும் மனசாட்சியுடனும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டில் தனியார் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும், தீ வைப்பதற்கும் கொலை செய்வதற்கும் பங்களித்த எவரும் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபட்டதாக உலக வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னை ஆதரித்தவர்கள், என்னை இடையறாமல் விமர்சித்தவர்கள், நான் என்றென்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் அப்பாவி மக்களுக்கு எந்த மாற்றமும் இன்றி அவரது அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறினார்.