இலங்கையில் ஆபத்தான நிபா வைரஸ் பரவும் அபாயம் - உயிரிழப்புகள் ஏற்படலாம் என அச்சம்
வௌவால்களின் இயக்க முறைகளை கண்காணிப்பதற்கு வௌவால்களுக்கு ஜிபிஎஸ் பொருத்துவதற்கான ஆராய்ச்சித் திட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை ஆரம்பித்துள்ளது.
மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய வைரஸ் நோய்களை பரப்பும் வௌவால்களின் அபாயத்தை மதிப்பிடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியில் ஜெர்மனியில் உள்ள ரொபர்ட் கோச் நிறுவனமும் பங்கேற்கிறது. மேலும் இலங்கை விஞ்ஞானிகள் குழு வௌவால்களை ஆய்வு செய்து வருகிறது.
நிபா வைரஸ்
இலங்கையில் வௌவாலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இந்த கொடிய நோய்க்கிருமி அண்டை நாடான இந்தியா மற்றும் பங்களாதேஷில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளது.
இறப்பு விகிதம் சுமார் 75 சதவீம் என ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முன்னாள் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்ட சஹான் சிறிவர்தன, இலங்கை வௌவால்களில் உள்ள நிபா வைரஸ் மாறுபாடு இந்தியாவின் கேரளாவில் பரவும் நிபா வைரஸைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
இந்த வைரஸ் இலங்கையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சிக் குழு மேலும் ஆராய்ந்து வருகிறது. முந்தைய ஆராய்ச்சிகள், வௌவால்கள் ஒரே இரவில் 60 கிலோ மீற்றர் வரை பறக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.
வௌவால்கள்
மேலும் சில வௌவால்கள் தொடர்ந்து 200 கிலோ மீற்றருக்கு மேல் பயணித்து, தங்கள் பாதையில் உள்ள மற்ற வௌவால் கூட்டங்களைப் பார்வையிட முடியும்.
இந்த வௌவால்கள் எங்கு செல்கின்றன, எவ்வளவு தூரம் பயணிக்கின்றன என்பதை கண்டறிந்து, நோய் எவ்வாறு பரவக்கூடும் என்பதை கணிப்பது முக்கியம் என கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் இனோகா சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படும் இலங்கையில் நிபா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை. எனினும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல ராபர்ட் கோச்சில் இந்த திட்டத்தை வழிநடத்தும் புகழ்பெற்ற பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் நிட்சே தெரிவித்துள்ளார்.



