'நிஞ்ஜா' வேடமணிந்த கும்பல் மசாஜ் நிலையத்தில் கொள்ளை
கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் 'நிஞ்ஜா' வேடத்தில் முகமூடி அணிந்து புகுந்த கும்பலொன்று, அதன் உரிமையாளரை தாக்கி, அவரிடமும் வெளிநாட்டு பெண்ணொருவரிடமும் இருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அதிகார போதையால் சட்டத்தின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த வேண்டாம்:அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி
மசாஜ் நிலையம்
பொலிஸ் தகவலின்படி, தாக்குதலின்போது மசாஜ் நிலைய உரிமையாளரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி, 116,500 ரூபாய் பணம், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் இருந்த 205,000 ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மேலும், மசாஜ் நிலையத்தில் இருந்த சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரையும் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்களையும் பணியில் அமர்த்தி, பப்பிலியான – கொழும்பு வீதியில் குறித்த மசாஜ் நிலையத்தை நடத்தி வந்ததாக உரிமையாளர், முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தாம் உறங்கிக் கொண்டிருந்தபோது பொருட்கள் சிதறும் சத்தம் கேட்டு விழித்ததாகவும், உடனே தாம் மற்றும் தாய்லாந்து பெண் உறங்கியிருந்த அறைக்குள் பொல்லுகள் மற்றும் கத்திகளுடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுவசெரிய அவசர மருத்துவ சேவை
தாக்குதலாளர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'மாதிவெலவத்தே பணுவா' என அழைக்கப்படும் நபர் ஒருவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த மசாஜ் நிலையத்தை தொடர்ந்து நடத்த அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியிருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்த உரிமையாளர் 1990 சுவசெரிய அவசர மருத்துவ சேவையின் ஆம்புலன்ஸ் மூலம் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கும்பல் மசாஜ் நிலையத்தின் கதவுகள், ஜன்னல்கள், பிரிப்பு சுவர்கள், அலமாரிகள், தொலைக்காட்சி, பிளெண்டர், ரைஸ் குக்கர் உள்ளிட்ட பல பொருட்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் டிவிஆர் பதிவுக் கருவியையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகார போதையால் சட்டத்தின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த வேண்டாம்:அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி