இலங்கையில் இளம் தம்பதி சுட்டுக்கொலை - பொலிஸாரிடம் தாயார் வழங்கிய முக்கிய தகவல்கள்
நுவரெலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளம் தம்பதி கடந்த 08 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் வசிக்கும் என்டன் தாஸ் மற்றும் நாதன் ரீட்டா என்ற தம்பதியே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தம்பதி, கணவரின் தாயாருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், தனது மகன் தனது மருமகளை சுட்டுக் கொன்றபோது, அயலவர்களிடம் உதவி பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியே தாய் ஓடியதாகவும், வீடு திரும்பியபோது, தனது மகனும் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
வாய்த்தர்க்கம்
“மகன், மருமகள் மற்றும் நானும் தனியான வீட்டில் வசித்து வருகின்றோம். அன்றைய தினம் இரவு மகனுக்கும், மருமகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் இரத்த காயங்களுடன் கிடந்தார்.
மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து விட்டதாகவும் , யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.
வெடிப்பு சத்தம்
நான் அயலவர்களை அழைப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது, பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து காணப்பட்டனர் ” என தாயார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மூலமே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நீதவான் விசாரணைக்கு பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.