நாடளாவிய ரீதியில் புதுவருட தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்! (Video)
புதுவருட தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நாடளாவிய ரீதியில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்க்கும் சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான புதுவருட நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் தேவாலயத்தில் மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நேற்று இரவு இடம்பெற்றது.
ஆலய பங்குதாரர்களால் மறை மாவட்ட ஆயர் வரவேற்று அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றி அதன் பின்பு புதுவருட விசேட திருப்பலி ஆலய பங்குதந்தை யோசப்மேரி அடிகளாரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இங்கு அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் நல்லாசி வேண்டியும் இங்கு அருட்தந்தையர்களினால் விசேட கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
சீரான காலநிலைக்கு மத்தியிலும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் வருகை பதியப்பட்டு சமூக இடைவெளிகளை பின்பற்றி வழிபாடுகள் இங்கு முன்னெடுக்கப்பட்டது.
[
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2019 ஆண்டு தற்கொலை குண்டு தாக்குதலுக்குப் பின்னர் சீயோன் தேவாலய புதுவருட நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு பிள்ளையாரடி சீயோன் தேவாலயத்தில் பிரதம போதகர் றொசான் மகேசன் தலைமையில் நேற்றிரவு இடம்பெற்றது.
சீயோன் தேவாலய பேதகர் றொசான் மகேசன் அவர்களினால் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் நல்லாசி வேண்டி இங்கு விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றிரவு இடம்பெற்ற இவ்வழிபாடுகளுக்காக விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி சீயோன்தேவாலய கிறிஸ்மஸ் ஆராதனை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
வழிபாடுகளின் இறுதியில் போதகர்களும் அடியார்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மன்னார்
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.45 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருகள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருப்பலியின் போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.
புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : ஆஷிக்
வவுனியா
புதுவருட தினத்தை முன்னிட்டு வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.
இதன்போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த கிறிஸ்தவ மக்கள் விசேட ஆராதனைகளில் கலந்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இதன்போது, தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : திலீபன்
