புத்தாண்டு தள்ளுபடி குறித்து அவதானமாக செயற்படுங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால், தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி வழங்கப்பட்ட பல ஆடைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விலையில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பண்டிகைக் காலத்தில் வெண்டைக்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய், வெல்லம் போன்றவற்றின் விலைகள் அந்த வியாபாரிகள் நினைக்கும் வகையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், சில வியாபாரிகள் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமைகளினால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், இந்த நிலைமைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |