இன்றைய நாடாளுமன்ற அமர்வு! புதிய சபாநாயகர் நியமனம்(LIVE)
புதிய இணைப்பு
சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உத்தியோகபூர்வமாக சபையில் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சபாநாயகராக, ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இன்றைய நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்றைய அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைஸர் முஸ்தபா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் முத்து இஸ்மாயில் மொஹமட் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இன்றைய அமர்வின்போது, மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 3.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நாளை மீண்டும் இந்த விவாதம் தொடரவுள்ளது.
இதற்கமைய முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
இதன் பின்னர் பி.ப. 3.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை மு.ப. 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5 மணி முதல்நாள் ஒத்திவைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்புத் தொகை மதிப்பீடு பற்றிய விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய முன்னர் தீர்மானிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட விடயங்களைப் பிறிதொரு தினத்தில் விவாதத்துக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.ப. 5 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
புதிய சபாநாயகர் தெரிவு இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளின் முதல் நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
பத்தாம் நாடாளுமன்றில் இதுவரையில் ஐந்து நாட்கள் அமர்வுகள் நடைபெற்றுள்ளன.
பதவி விலகிய அசோக ரன்வல
இந்த அமர்வுகளின் போது சபாநாயகராக கடமையாற்றிய அசோக ரன்வல தனது பதவியில் இருந்து அண்மையில் விலகியுள்ளார்.
இந்த பதவி வெற்றிடத்திற்கு இன்றைய தினம் புதிய சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
இன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் கூட உள்ளதுடன், புதிதாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
அசோக ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து விலகியமை குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அதிகாரபூர்வமாக நாடாளுமன்றில் அறிவிப்பார்.
அதன் பின்னர் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் சபாநாயகர் பதவிக்காக முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.