அரச நிறுவனங்களில் நடைமுறைக்குவரவுள்ள புதிய கட்டுப்பாடு
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச்சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டை தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் நாடு எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் கொண்டு, காற்றுச்சீரமைப்பியின் பயன்பாட்டினை குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இது தொடர்பில் அறிவுறுத்துமாறு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், எரிசக்தி சேமிப்பு முயற்சிகள் மூலம் மின்சார சுமையை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறு குறைத்தால் திட்டமிடப்பட்ட மின் தடைகளின் அளவைக் குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய மின் நெருக்கடியைச் சமாளிக்கும் நடவடிக்கையாக வார நாட்களில் பிற்பகல் 2.30 மணிக்குப் பின்னர் மின்கட்டமைப்பில் மின் சுமை குறைக்கப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் காற்றுச்சீரமைப்பி பயன்பாட்டின் சுமை மிகவும் அதிகமாக உள்ளதுடன் முடிந்தவரை அதனை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய,, பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை கட்டிடங்களில் உள்ள காற்றுச்சீரமைப்பியை நிறுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.