PSL வரலாற்றில் புதிய சாதனை: 2.45 பில்லியன் ரூபாய்க்கு ஏலம் போன முல்தான் அணி!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) 11வது சீசனுக்கு முன்னதாக நடைபெற்ற ஏலத்தில், முல்தான் சுல்தான்ஸ் அணி சுமார் 2.45 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (ஆண்டு கட்டணம்) என்ற சாதனை விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நிதித் தொழில்நுட்ப நிறுவனமான (Fintech) 'வாலி டெக்னாலஜிஸ்' (Walee Technologies) இந்த அணியைக் கைப்பற்றியுள்ளது.
புதிய சாதனை
அணியை வாங்கிய கையோடு, அதன் பெயரை 'முல்தான்' என்பதிலிருந்து 'ராவல்பிண்டி' (Rawalpindi) என குழுமம் மாற்றியுள்ளது.
இதன் மூலம் தெற்கு பஞ்சாப் பிராந்தியம் தனது ஒரே அணியை இழந்துள்ளது.

இனி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் இந்த புதிய ராவல்பிண்டி அணி என இரண்டு அணிகளுக்கும் சொந்தமான இடமாக இருக்கும்.
முன்னதாக அலி தரீன் (Ali Tareen) வசம் இருந்த இந்த அணி, ஒரு வீரரைக் கூட தக்கவைக்கவில்லை (Retention). எனவே, 11வது சீசனுக்கான ஏலத்தில் இந்த அணி தனது முழு வீரர்களையும் புதிதாகத் தேர்ந்தெடுக்கவுள்ளது.
மிகப்பெரிய அங்கீகாரம்
ஏலத்தொகை 1.82 பில்லியனில் தொடங்கி விறுவிறுப்பாக உயர்ந்தது. 'சிடி வென்ச்சர்ஸ்' மற்றும் 'பார்ட்டிகல் இக்னைட்டர்' போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு வாலி குழுமம் இந்தச் சாதனை விலைக்கு அணியை வாங்கியது.

இதற்கு முன்னதாக 'சியால்கோட்' அணி 1.85 பில்லியனுக்கு விற்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த விற்பனை குறித்துப் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, "இது லீக்கின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
ஒரு காலத்தில் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தவித்த அணிகள் இன்று இவ்வளவு பெரிய விலைக்கு விற்பனையாவது பிஎஸ்எல் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.