வடக்கின் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு புதிய திட்டம்: ஆளுநரிடம் கையளிப்பு
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட “2026 - 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்” இன்று(06.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போதே, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலா மையங்கள்
இதன்போது, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்திடம் இந்த திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, வை.நந்தகோபன் தலைமையிலான விசேட நிபுணர் குழுவினரால் இந்தத் தந்திரோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் மொத்தம் 431 சுற்றுலா மையங்கள் இந்த திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி,
- யாழ்ப்பாண மாவட்டம்: 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 200 மையங்கள்.
- முல்லைத்தீவு மாவட்டம்: 77 மையங்கள்.
- கிளிநொச்சி மாவட்டம்: 56 மையங்கள்.
- வவுனியா மாவட்டம்: 49 மையங்கள்.
- மன்னார் மாவட்டம்: 49 மையங்கள்.
இவற்றில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னுரிமை அடிப்படையில் தலா 10 சுற்றுலா மையங்களும், மாகாண மட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தலா 2 சுற்றுலா மையங்களுமாக மொத்தம் 10 மையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுற்றுலா மையமும் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணம், அங்குள்ள சுற்றுலா வாய்ப்புகள், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், வடக்கின் சுற்றுலாவில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள், பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என அனைத்துத் தரவுகளும் இந்த மூலோபாயத் திட்ட நூலில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
விசேட கலந்துரையாடல்
அத்துடன், இந்த திட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
இந்தச் சிறந்த திட்டத்தை வெறும் ஆவணமாக மட்டும் வைத்திருக்காது, இதனைச் செயற்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சுற்றுலா மையத்தையும் சுற்றுலாப் பணியக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்துரையாடி, அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மன்னார் மாவட்டச் செயலர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உதவிப் பிரதம செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர், 5 மாவட்டச் செயலகங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், திட்டத்தைத் தயாரித்த வவுனியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam