புதிய அமைப்புசார் குற்றங்கள் தொடர்பில் சமர்பிக்கப்படவுள்ள சட்ட யோசனை
அரசு அமைப்புசார் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த புதிய அமைப்புசார் குற்றங்களுக்கான சட்ட யோசனை ஒன்று இந்த மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தற்போது இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கை
இந்த புதிய சட்டத்தின் மூலம், சந்தேக நபர்களை விசாரணைக்காக பொலிஸார், நியாயமான காலத்திற்கு காவலில் வைத்திருக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசார் குற்றங்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ள வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு, போதைப்பொருள் மற்றும் அமைப்புசார் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும், அவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கும் கடும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படும் படகுகள் உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, இதனுடன், 1984 ஆம் ஆண்டின் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை சட்டமும் திருத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் தயாராகியுள்ளது. இந்த திருத்தமும் அமைப்புசார் குற்றங்கள் யோசனையுடன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.