கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய புதிய முறை
கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய தற்போதைய நடைமுறையில் உள்ள 'ஸ்மியர் டெஸ்ட்' முறைக்குப் பதிலாக, மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை அதிக துல்லியத்துடனும், எளிமையாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹூபே (Hubei) மாகாணத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பிரித்தானிய மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சாதாரண சுகாதார துவாய்களில் இணைக்கப்படும் ஒரு சிறிய பருத்திப் பட்டை (Cotton Strip) மூலம் மாதவிடாய் இரத்தம் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
பரிசோதனைகள்
மருத்துவமனைகளில் செய்யப்படும் வழக்கமான பரிசோதனைகள் 92.1% துல்லியத்தைக் கொண்டிருந்தால், இந்த மாதவிடாய் இரத்தப் பரிசோதனை 94.7% துல்லியத்தைக் கொண்டுள்ளது.
பிரித்தானியா போன்ற நாடுகளில் புற்றுநோய் பரிசோதனைக்கான அழைப்பு விடுக்கப்படும் பெண்களில் மூன்றில் ஒருவர் (33%) அந்தப் பரிசோதனைக்குச் செல்வதில்லை.

இளம் பெண்களிடையே (25-29 வயது) விழிப்புணர்வு இன்மை மற்றும் பயம், சிறுபான்மையினர் (Ethnic Minorities) கலாசாரத் தடைகள் மற்றும் மொழிப் பிரச்சனைகள், மருத்துவமனைக்குச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிரமங்கள் என்பன பரிசோதனை விகிதம் குறையக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில், ஆசிய வம்சாவளி பெண்களிடையே இந்தப் பரிசோதனைக்குச் செல்லும் விகிதம் வெள்ளையினப் பெண்களை விட 32% குறைவாக உள்ளது. கருப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் ஆபிரிக்கப் பெண்களிடையே 1,00,000 பேருக்கு 4.9 என்ற அளவில் உள்ளது.
இது வெள்ளையினப் பெண்களிடையே (2.7) இருப்பதை விட மிக அதிகம். எவ்வாறாயினும் இந்த புதிய முறைமையால் மருத்துவமனைக்குச் சென்று தாதியர்கள் அல்லது மருத்துவர் மூலம் பரிசோதனை செய்வதில் உள்ள கூச்சம் தவிர்க்கப்படும்.
கருப்பை வாய் புற்றுநோய்
அத்துடன் யோனிக்குள் கருவிகளை நுழைக்கத் தேவையில்லை என்பதால் வலி அல்லது அசௌகரியம் இருக்காது. மேலும் கலாசார ரீதியாகத் தயக்கம் காட்டும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும்.
எனினும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்தப் பரிசோதனை பயன் தராது. இந்த முறை இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. இது அனைத்து நாடுகளிலும் நடைமுறைக்கு வர இன்னும் சில காலம் ஆகலாம்.

பிரித்தானியா போன்ற நாடுகளில் தற்போது வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய 'யோனி ஸ்வாப் கருவிகள் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் மாதவிடாய் இரத்தப் பரிசோதனையும் இதில் இணைய வாய்ப்புள்ளது. கருப்பை வாய் புற்றுநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 100% குணப்படுத்தக்கூடியது.
எனவே, வயது வந்த பெண்கள் தங்களுக்குரிய பரிசோதனைகளைத் தவறாமல் செய்துகொள்வது அவசியமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam