புலனாய்வுத்துறையை புதிய அரசு பலப்படுத்த வேண்டும்: அநுர தரப்பிடம் கோரிக்கை
பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வுத்துறையை இந்த அரசு பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன்(Pramitha Bandara Tennakone) தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அரண்கள்
அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருக்கின்றது என அரசு சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது.
தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும். அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வுத்துறையைப் பலப்படுத்த வேண்டும்.
அவர்களின் மன நிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும். ஆனால், எமக்குக் கிடைத்த தகவலுக்கமைய எமது புலனாய்வுத்துறையினரின் மனநிலை வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
புலனாய்வுப் பிரிவின் பிரதானி
அவர்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்தப் பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகின்றோம்.
முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.
அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்கு வர இருப்பவருக்கு அவரின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள சிறிது காலம் அந்தப் பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம் குடா சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |