இலங்கைக்கு வரும் சிறுவர்கள் தொடர்பில் புதிய தீர்மானம்
வெளிநாடுகளில் இருந்து வரும் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு கோவி-19 பரிசோதனை அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை (Civil Aviation Authority Srilanka) தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச (Upul Darmadasa) இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு வருகை தரும் 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கோவிட் வைரஸ் தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை தம்வசம் எடுத்து வர வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பீ.சி.ஆர் அறிக்கையானது இலங்கைக்கு வருகை தருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்டிருக்க வேண்டும் எனவும் அது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் எனவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடந்த மூன்று மாத காலத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர், இலங்கைக்கு வருகை தர வேண்டுமாயின், பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை மற்றும் 48 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட ரெபீட் என்டிஜன் அறிக்கையையும் எடுத்து வர வேண்டும்.
அப்படியான நபர்கள் நோய் அறிகுறிகள் சம்பந்தமாக பதிவிடப்பட்ட அட்டை, வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை உறுதிப்படுத்தும் பீ.சி.ஆர் அறிக்கை அல்லது ரெபீட் என்டிஜன் அறிக்கையும் எடுத்து வர வேண்டும் எனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
