ஐஸை விடவும் ஆபத்தான போதைப் பொருள் இலங்கையில் தயாரிப்பு
ஐஸ் எனப்படும் மெதபெடமைன் என்ற போதைப் பொருளை விடவும் ஆபத்தான புதிய போதைப் பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெலிகம பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் மீட்கப்பட்ட போதைப் பொருள் மாதிரிகளை சோதனையிட்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு செயல்பட்டிருந்த போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அங்கு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை குறித்த இறுதி அறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தங்காலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 3 லாரிகளில் இருந்த போதைப்பொருள் சரக்கு தொடர்பான விசாரணைகளில், சந்தேக நபர்கள் பயணித்ததாகக் கூறப்படும் ஒரு மோட்டார் வாகனம் மாத்தறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.



