இங்கிலாந்தில் பரவத்தொடங்கியது மு மாறுபாடு! - 55 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் கோவிட் தொற்றின் புதிய மாறுபாடு பரவத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரையில் 55 பேர் புதிய மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு என்று அழைக்கப்படும் புதிய திரிபு முதலில் தென் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.
மு, அல்லது பி .1.621 என்றழைக்கப்படும் புதிய மாறுபாடு முதலில் கொலம்பியாவில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் தென் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்த புதிய மாறுபாடு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது எனவும், இது குறித்து மேவதிகமாக அதிக ஆய்வுகள் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையில், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் புதிய ஆய்வில்,
வைரஸுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது 73 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், மேலும் முழுமையான தடுப்பூசி போடப்பட்டதில் கடுமையான அறிகுறிகளின் வாய்ப்புகள் சுமார் மூன்றில் ஒரு பங்கு (31 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,154 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 68,62,904 ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 178 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 55 லட்சத்து 33 ஆயிரத்து 227 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வைரஸ் பாதிப்புடன் 11,96,757 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.