45 ஆண்டுகளுக்குப் பின் அதிரடி மாற்றம்! புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வர்த்தமானியில்..
இலங்கையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தயாரிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ அரசாங்கத்தால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆலோசனையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நாளில் நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய சட்டமூலம்
இலங்கைப் பிரஜைகள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமைந்துள்ள அரச இராஜதந்திர சொத்துகள் மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பது இந்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கு அமைவாக, பயங்கரவாதக் குற்றங்கள், விசாரணைகள், தடுப்புக்காவல் மற்றும் வழக்குத் தொடர்வதற்கான புதிய சட்டக் கட்டமைப்பை இந்தச் சட்டமூலம் வழங்குகிறது.

அரசியல் அல்லது ஏதேனும் கருத்தியல் நோக்கத்திற்காக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் அல்லது அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் கொலைகள், கடுமையான காயங்களை ஏற்படுத்துதல், பணயக்கைதிகளாக தடுத்து வைத்தல், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவித்தல், இணையத் தாக்குதல்கள் ஆகியவை பயங்கரவாதக் குற்றங்களாக இதில் வரையறுக்கப்பட்டுள்ளன.
அமைதியான போராட்டங்கள்
எனினும், அமைதியான முறையில் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, அமைதியான போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், ஊடகவியலாளர்களின் நியாயமான செய்தி அறிக்கைகள், அரசியல் விமர்சனங்கள், கருத்து வெளிப்பாடுகள் மற்றும் கல்வி அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பயங்கரவாதக் குற்றங்களாகவோ பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவோ கருதப்படாது என சட்டமூலத்தின் 4(4) பிரிவு உறுதிப்படுத்துகிறது.
சந்தேகநபர்களைக் கைது செய்தல்
சந்தேகநபர்களைக் கைது செய்யும் போதும் விசாரணைகளை முன்னெடுக்கும் போதும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்டமை தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் நெருங்கிய உறவினருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும். விசாரணைகள் ஒலி-ஒளி (Audio-Visual) தொழில்நுட்பத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.
நீதவான்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முன் அறிவிப்பின்றி தடுப்பு நிலையங்களைப் பார்வையிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் காலத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள்
தடுப்புக்காவல் காலம் தொடர்பாகவும் கடுமையான வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பிக்கும் தடுப்பு உத்தரவு ஒரு தடவையில் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. ஒட்டுமொத்த தடுப்புக்காவல் காலம் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு மேல் ஒருவரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கு மேல் நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். மேலும், தடுப்பு உத்தரவுகளின் சட்டபூர்வத் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ‘சுயாதீன மறுஆய்வுக் குழு’ ஒன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தடுப்புக்காவல் கைதிகள் இந்தக் குழுவிடம் நிவாரணம் கோர முடியும். நீதவான் முன்னிலையில் வழங்கப்படும் வாக்குமூலங்கள் சந்தேகநபர் ஒருவர் நீதவான் முன்னிலையில் வழங்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், அந்த வாக்குமூலத்திற்கு முன்னரும் பின்னரும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குதல், வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் பொலிஸ் மா அதிபர் மூலம் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட அதிகாரங்கள் நீதவானுக்கு வழங்கப்பட்டுள்ளன.
குற்றங்களுக்கான தண்டனைகள் பயங்கரவாதத் தாக்குதலொன்றின் காரணமாக மரணம் ஏற்பட்டமை தொடர்பில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
ஏனைய பாரதூரமான குற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவி அல்லது ஆதரவு வழங்குதல் மற்றும் நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்கு 20 ஆண்டுகள் வரை கடூழியச் சிறைத்தண்டனையும் 20 மில்லியன் ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும்.
எனினும், மரணம் அல்லது பாரிய சேதம் ஏற்படாத சந்தர்ப்பங்களில், சட்டமா அதிபரின் இணக்கப்பாடு மற்றும் மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பகிரங்க மன்னிப்புக் கோருதல், புனர்வாழ்வு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் வழக்குத் தொடர்வதை ஒத்திவைக்க அல்லது இடைநிறுத்த புதிய சட்டமூலம் ஏற்பாடுகளை வழங்குகிறது.
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri