கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(09) வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விதிமுறை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''உரிய முறையை பின்பற்றி தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க அதிபர்களாக பதவி வகிக்க தகுதியுள்ளவர்களுக்கு அவர்களது கல்வித் தகைமைக்கு அமைய நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க வெற்றிடம் காணப்படும் தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு என வேறு வேறு நடைமுறைகளை பின்பற்றாமல் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே விதமான முறைமையையே பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
பாரிய நெருக்கடி
கடந்த அரசாங்கம் பாடசாலை அதிபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்திருந்தது. எந்த ஒரு முறைமையையும் பின்பற்றாமல் பதில் அதிபர்களை நியமித்திருந்தது.
அதனால் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த விடயத்தில் தேவையற்ற பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.