கிளிநொச்சியில் பூர்வீக காணிகளில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி - வனஜீவராசிகள் திணைக்களம் மீது புதிய குற்றச்சாட்டு
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பரம்பரையாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களுடைய காணிகளில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து மக்கள் வாழ்ந்து வருவதுடன், அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
காணி உரிமத்துடன் போராடும் மக்கள்
அதற்கான காணி ஆவணங்களையும் அப்பகுதி மக்கள் தம்வசம் வைத்துள்ளனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் 1991ஆம் ஆண்டில் ஆனையிறவில் முன்னெடுக்கப்பட்ட ஆகாயக் கடல் வழி இராணுவ நடவடிக்கை காரணமாக முற்றுமுழுதாக இடம்பெயர்ந்துள்ளனர்.

சுமார் 35 வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அப்பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர். தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை அச்சுறுத்தும் திணைக்கள அதிகாரிகள்
தலைமுறை தலைமுறையாக பூர்வீகமாக வாழ்ந்த இந்த நிலங்களில் இருந்து இவர்களை வெளியேற்றும் நோக்கில் குறித்த அதிகாரிகள் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் (19) குறித்த பகுதிக்கு சிவில் உடையில் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அந்தக் காணிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.
அவர்கள் குறித்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஞானசார தேரரின் புதிய நூல் வெளியீடு - நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்
